headlines

img

கணித ஆசிரியரை சிலம்பொலியாக்கியது தமிழ் ஆர்வம்

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்ற பாரதியின் பாடல் எவ்வளவு உண்மை என்பதற்கு சிலம்பொலி செல்லப்பனாரின் வாழ்க்கையே எடுத்துக்காட்டு.  சென்னை பெரியார் திடலில் உள்ளமணியம்மை மன்றத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் உரையாளர்களின் கருத்துக்களும் இதற்கு வலு சேர்த்தன. சிலம்பொலி செல்லப்பனார் என்ற பெயரே அவரைத் தமிழாசிரியராக அடையாளப்படுத்தும். ஆனால் அவர் கணித ஆசிரியர் என்பது மற்றவர்கள்சொன்னால் தான் தெரியும். பலர் எழுதிய நூல்களுக்கு அவர் எழுதிய அணிந்துரைகள் ஒரு நூலாகவந்துள்ளது.  அணிந்துரைகளும் ஆய்வுரைகளாக அமைந்திருப்பது  கூடுதல் சிறப்பு எனும் அறிமுகஉரையாக அமைந்தது கவிஞர் கலிபூங்குன்றனின் தொடக்கவுரை.  சிலம்பொலியாரின் உருவப்படத்தைத் திறந்துவைத்துப் பேசிய திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி,  சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காகத் தன் சொத்தையும் இழக்கத் தயங்காதவர் செல்லப்பனார் என்பதை நாமக்கல் பள்ளிஉதாரணத்தோடு விவரித்தது மனதை நெகிழ்த்தியது. செல்லப்பனாரோடு இணைத்து  இரட்டையர் எனத் தமிழ் ஆர்வலர்களால் பாராட்டப்படும் அளவுக்கு நெருக்கமான கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவுகளை மலர்த்தினார். கணிதஆசிரியரான செல்லப்பனாரைத் தமிழில் வித்தகராக விளங்கச் செய்தவர் அவருக்குத்தமிழாசிரியராக இருந்த வை.பொன்னம்பலனார்தான் என்ற உண்மையை அவர் உரக்கப்பேசினார்.  தன் பிள்ளைகளுக்குத் தொல்காப்பியன், மணிமேகலை, நகைமுத்து, கவுதமி எனப் பெயரிட்டுத் தனது தமிழார்வத்தை உறுதி செய்தவர். கணித நூல்களைக் கூட நல்ல தமிழ் நடையில் எழுத முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். கணக்குக்கும் எனக்கும் பிணக்கு.  ஆனால், கணித நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியில் கவிதையை அச்சிட என்னிடம்தான் கவிதை கேட்பார்.  நானும் எழுதிக் கொடுப்பேன்.  கணிதத்தையும் தமிழையும் இணைக்கும் பாலமாக விளங்கியவர் செல்லப்பனார் என்று 50 ஆண்டுகால நட்புறவு, கவியுறவு, தமிழுறவு பற்றி விவரித்த தமிழன்பன் அடுத்து கூறியதுதான் அறியத்தக்க நுட்பச் செய்தி.ஒருவர் இறந்து விட்டால் அழுவது அல்ல அஞ்சலி என்றவர் ஜப்பான் நடைமுறையை நினைவுபடுத்தினார்.  அந்நாட்டில் மரணத்தை கலாச்சாரமாக பார்ப்பார்கள்.  அதற்கு ‘டெத் கல்சர்’ என்றே பெயர். இறந்தவர் பற்றி கவிஞர்கள் கவிதைகள் எழுதுவார்கள்.  அவற்றைத் தொகுத்து மரணப்பாடல்கள்-டெத் பொயம்ஸ்-என்று வெளியிடுவார்கள்.  இறுதிக் காலத்தில் தனக்குப் பிரியமானவர்களுக்கு ஏதாவது ஒன்றைத் தருவதும்  ஜப்பானியர் பழக்கம். இதனை ‘பார்ட்டிங் கிஃப்ட்’  என்பார்கள். அந்த வகையில் சிலம்பொலி செல்லப்பனார் நமக்கு வழங்கியிருப்பது சங்க இலக்கியங்களின் ஆய்வாக வெளியிட்டுள்ள அகப்பொருள் களஞ்சியம் என்ற 14 தொகுப்பு நூல்களாகும். இதற்குத் தட்டச்சு செய்து, பிழை நீக்கி, செப்பம் செய்வதற்காக மட்டும் 11 லட்சம் ரூபாய் சொந்தப் பணத்தை செலவழித்திருக்கிறார். பதிப்பகத்தார் கொடுத்தது எண்பதாயிரம் ரூபாய்தான். செய்வன திருந்தச் செய்ய வேண்டும்; மனித நேயம்; பிறிதின்நோய் தன் நோய்போல் உணர்தல்போன்ற பண்புகளுக்கு சொந்தக்காரர் செல்லப்பனார் என்றார் கவிஞர் ஈரோடு தமிழன்பன். செல்லப்பனாருக்கு 1953 ஆம் ஆண்டு சிலம்பொலி என்ற பட்டப் பெயரைச் சூட்டியவர் ரா.பி.சேதுப்பிள்ளை என்ற தகவலுடன் அடுத்து பேச்சைத் தொடங்கினார் மேனாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன். பொதுவாக எழுதப்பட்ட நூலால்பெயர் பெறுவார்கள் எழுத்தாளர்கள்.  இவர் பெயர்பெற்ற பிறகுதான் ‘சிலம்பொலி’ என்ற நூலை எழுதினார்.  படிப்பறிவு இல்லாத பாமரர்களிடமும் தமிழ் இலக்கியத்தைக் கொண்டு சென்றவர் சிலம்பொலியார்.  புலவர் குழந்தையின் இராவண காவியம் நூல் தடை செய்யப்பட்டிருந்த போதும்அந்த நூலின் கருத்தினை தொடர் சொற்பொழிவு நிகழ்த்தி மக்களிடம் கொண்டு சென்றவர் சிலம்பொலியார். மேடைகளில் அடிக்கடி இரண்டுகருத்துக்களை அவர்  வலியுறுத்திச் சொல்வார்.

“ஐயா 
உங்கள் கைத்தடி ஒன்று
காணாமல் போனதால்
கண்டவனெல்லாம்
தடி எடுக்கிறான்’’
"ஜெர்மானிய 
தாடிக்காரரும்
ஈரோட்டு தாடிக்காரரும்
சேர்ந்தால்தான்
தமிழருக்கு விடிவு வரும் " 
நினைவேந்தல் என்பது இறந்தவரின் நினைவு
களை ஏற்றிப் போற்றுவது அல்ல. அவரிடமிருந்த போற்றத்தக்க குணநலன்களை,  கருத்துக்களை ஏந்தி, வளரும் தலைமுறைக்கு கையளிப்பதாகும்  என்று ராஜேந்திரன் உரையை நிறைவு செய்தார். 
தொகுப்பு: மயிலை பாலு

;